
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ளது. 2013ஆம் ஆண்டு முதல் ஐசிசி கோப்பையையே வெல்லாமல் உள்ள இந்திய அணி இந்த தொடருக்காக முழு வீச்சில் தயாராகி வருகின்றனர். இதற்கான திட்டங்களில் இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ஷுப்மன் கில், ஹூடா, என பல இளம் வீரர்கள் சேர்ந்துள்ள சூழலில், இந்திய அணிக்காக நீண்ட வருடங்களாக உதவி வந்த ஷிகர் தவான் எங்கு சென்றார் என்ற அளவிற்கு மறைந்துவிட்டார்.
கடந்த 2022ஆம் ஆண்டில் இந்திய அணி 24 ஒருநாள் போட்டிகளை விளையாடியது. இதில் ஷிகர் தவான் 22 போட்டிகளில் விளையாடியிருந்தார். இந்தியாவின் முழு நேர கேப்டனான ரோஹித் சர்மாவே 8 போட்டிளில் தான் வழிநடத்திய சூழலில், தவான் 9 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டிருந்தார். இந்த 22 போட்டிகளில் அவர் 688 ரன்களை குவித்தார். அவரின் சராசரி 34 ரன்களாக இருந்து.
ஆனால் 2023ஆம் ஆண்டின் தொடக்கமே அவருக்கு சரிவாக உள்ளது. உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் திட்டத்தில் கூட ஷிகர் தவானின் பெயர் பரிந்துரைக்கப்படாமல் இருக்கிறது. இதற்கு காரணம் இஷான் கிஷான் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவர் தான். எதிர்கால திட்டம் எனக்கூறி தவானை புறகணித்து வருகின்றனர். அதற்கேற்றார் போல, அவர்கள் இருவருமே ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்து தங்களின் இடங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டனர்.