
அடுத்த மாதம் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் தற்போது ஒவ்வொரு இந்திய ரசிகரின் கண்களும் இந்திய அணியின் தேர்வில் உள்ளன. இதற்கிடையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு பெயர் கருண் நாயர் என்பது தான்.
ஏனெனில் தற்சமயம் நடைபெற்று வரும் இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கோப்பை தொடரான விஜய் ஹசாரே கோப்பையில் விதர்பா அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் கருண் நாயர் இதுவரை 752 என்ற அற்புதமான சராசரியுடன் 752 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் இத்தொடரில் அவர் விளையாடிய 7 இன்னிங்ஸில் 5 சதங்களை விளாசி அசத்தியுள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில், இந்த அதிரடியான செயல்பாட்டிற்குப் பிறகு, அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
அதிலும் அவர் பேட்டிங் செய்த ஏழு இன்னிங்ஸ்களில், அவர் ஆறு முறை 50 ரன்களைக் கடந்துள்ளார், ஒத்தொடரில் அவரது குறைந்த பட்ச ஸ்கோர் என்பது ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் எடுத்ததுதான். இதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளனர். இந்நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கருண் நாயர் இடம் பெறுவார் என்று தான் நினைக்கவில்லை என முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.