அடுத்த உலகக்கோப்பையில் இவர்களை பார்க்க விரும்பவில்லை - விரேந்திர சேவாக்!
அடுத்த டி20 உலகக்கோப்பை தொடரில் எந்தவொரு சீனியர் வீரர்களின் முகத்தையும் பார்க்க கூடாது என சேவாக் பேசியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணி மிகவும் மோசமான முறையில் வெளியேறியது. லீக் சுற்றில் கலக்கி ரசிகர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துவிட்டு அரையிறுதியில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதனையடுத்து இந்திய அணி வீரர்கள் மீதும், கேப்டன் ரோஹித் சர்மா மீது பல்வேறு விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இன்னும் சிலர் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மீது குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்திய அணி தோல்வி குறித்து விளக்கமளித்திருந்த கேப்டன் ரோஹித் சர்மா, 169 ரன்கள் என்பது போதுமான இலக்கு என்று தான் நினைத்தோம். பவுலிங்கில் தொடக்கத்திலேயே பதற்றமான மனநிலையுடன் சென்றதால் தான் விக்கெட் எடுக்க முடியாமல் போனது. இதில் இருந்து கற்றுக்கொண்டு இனி தவறுகளை சரி செய்வோம் எனக்கூறியிருந்தார்.
Trending
இந்நிலையில் அடுத்தாண்டு டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து முன்னாள் வீரர் சேவாக் முக்கிய கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், “மனநிலை குறித்து எல்லாம் நான் பேச விரும்பவில்லை. அடுத்த உலகக்கோப்பையில் சில முகங்களை நான் மீண்டும் பார்க்கக்கூடாது. 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பையிலும் இதே தான் நடந்தது. பல வருடங்களாக ஆடிய சீனியர் வீரர்கள் புறகணிக்கப்பட்டனர். ஒரு இளம் படை தான் சென்று உலகக்கோப்பையை வென்று வந்தது.
எந்தவித எதிர்பார்ப்புமே இல்லாத போது இளம் வீரர்கள் கோப்பை வென்றனர். அதே போன்ற மாற்றங்களை அடுத்த உலகக்கோப்பையில் நான் பார்க்க விரும்புகிறேன். அவர்கள் வெல்ல வேண்டும் என யாரும் எதிர்பார்ப்பு வைக்க மாட்டார்கள். ஆனால் இந்தியாவின் எதிர்கால சூப்பர் ஸ்டார்களாக அவர்கள் தான் இருப்பார்கள்.
இந்திய அணியின் எதிர்காலத்தை பற்றி கவலை இருந்தால், அடுத்த 2 ஆண்டுகளை பயன்படுத்தி தான் ஒரு நல்ல அணியை உருவாக்க முடியும். இதுகுறித்து அணி தேர்வுக்குழு அதிகாரிகள் யோசிக்க வேண்டும். ஒரு வேளை அடுத்த உலகக்கோப்பையிலும் இதே அணி, இதே திட்டத்துடன் சென்றால் நிச்சயம் இதே முடிவு தான் இந்திய அணிக்கு வரும்” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now