
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. அதன்படி ரோஹித் சர்மா தலைமையிலான இந்த இந்திய அணியில் ரிஷப் பந்த் மற்றும் அறிமுக வீரர் யாஷ் தயாள் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேற்கொண்டு விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட நட்சத்திர் வீரர்களுக்கும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது. அதேசமயம் ஸ்ரேயாஸ் ஐயர், முகேஷ் குமார் உள்ளிட்ட வீரர்களுக்கு இந்த அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேசமயம் இப்போட்டிக்கான இந்திய அணியில் அனுபவ வீரர் கேஎல் ராகுல் மற்றும் இளம் வீரர் சர்ஃப்ராஸ் கான் இருவரும் இடம்பிடித்துள்ளனர்.
இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் 5ஆம் வரிசை வீரர் யார் என்பதில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகிறது. ஏனெனில் காயத்தில் இருந்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள கேஎல் ராகுல் ஒருபக்கமும், தனது அறிமுக டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃப்ராஸ் கான் மற்றொரு பக்கமும் உள்ளதால் இவர்களி யாருக்கு பிளேயிங் லெவனில் வய்ப்பு கிடைக்கும் என்ற சந்தேகம் வழுத்துள்ளது.