
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி தொடரை இழந்திருந்தாலும், நேற்று ராஜ்கோட் நகரில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று அந்த உத்வேகத்துடன் உலககோப்பை தொடரை அணுகவுள்ளது.
அதன்படி ராஜ்கோட் நகரில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியானது சிறப்பான பேட்டிங்கின் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 352 ரன்கள் குவித்தது. பின்னர் 353 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 286 ரன்கள் குவித்தது.
இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் டாப் 4 வீரர்களான ரோஹித் சர்மா, வாஷிங்டன் சுந்தர், விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை வீழ்த்திய மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் 10 ஓவர் வீசிய மேக்ஸ்வெல் 40 ரன்கள் விட்டு கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.