
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா விளையாடும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று கேப் டவுன் நகரில் நடைபெறுகிறது. இத்தொடரில் ஏற்கனவே முதல் போட்டியில் மோசமாக விளையாடிய இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது.
அதனால் குறைந்தபட்சம் இந்த போட்டியிலாவது வென்று ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா விளையாட உள்ளது. முன்னதாக சென்சூரியன் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் துறையில் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரை தவிர்த்து எஞ்சிய வீரர்கள் சுமாராக விளையாடியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அதை விட 2023 சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்த இளம் வீரர் ஷுப்மன் கில் அந்தப் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்தும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 வருடங்களாகியும் இன்னும் 30 என்ற சுமாரான சராசரியை கூட தாண்ட முடியாமல் தடுமாறி வருவதால் நிறைய விமர்சனங்கள் எழுந்துள்ளன.