
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஐயடன் மார்க்ரம் 52 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 45 ரன்களையும், இறுதியில் ஆயூஷ் பதோனி 36 ரன்களையும் எடுத்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களைச் சேர்க்க தவறினர். இதன் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை மட்டுமே எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் கருண் நாயர் 15 ரன்னிலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் போரல் 51 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேஎல் ராகுல் 57 ரன்களையும், கேப்டன் அக்ஸர் படேல் 34 ரன்களையும் சேர்த்ததன் மூலம், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.