
கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தோல்விக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வாரியம் மூத்த வீரர்களை இந்திய டி20 கிரிக்கெட் அணியில் இருந்து ஒதுக்கி வைத்தது. அதன் பிறகு ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களைக் கொண்டு அதிரடியான அணுகு முறையைப் பின்பற்றும் ஒரு புதிய இந்திய டி20 அணியை உருவாக்குவதற்கான வேலைகளை கடந்த ஒரு வருடமாக செய்து வந்தது.
இப்படியான நிலையில் ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் காயம் அடைந்திருக்கும் நிலையிலும், நடந்து முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சிறப்பாக விளையாடியிருந்த காரணத்தினாலும், 14 மாதங்களுக்குப் பிறகு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் இந்திய டி20 அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இதன் காரணமாக கடந்த ஒரு வருடமாக இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இந்திய டி20 அணியை உருவாக்குவதில் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் முடக்கப்பட்டு, மீண்டும் எங்கிருந்து ஆரம்பிக்கப்பட்டதோ அதே பழைய நிலையையே அடைந்திருக்கிறது. மேலும் இதில் ஒரு புதிய மாற்றமாக தற்பொழுது ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் நீக்கப்பட்டு, ஜிதேஷ் சர்மா உடன் சஞ்சு சாம்சன் இந்திய டி20 அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.