டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் நம்பிக்கை உள்ளது - கிளென் மேக்ஸ்வெல்!
டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறும் நம்பிக்கை இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். நடப்பு உலகக் கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் இரட்டைச் சதம் விளாசி அசத்தினார். அதேபோல, இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரின் 3ஆவது டி20 போட்டியில் 47 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.
இந்நிலையில் தொடர்ச்சியாக விளையாடி வருவதன் காரணமாக அவர் கடைசி இரண்டு டி20 போட்டிகளிலிருந்து விடுப்பு எடுத்து தாயகம் திரும்பியுள்ளார். இந்த நிலையில, டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறும் நம்பிக்கை இருப்பதாக கிளன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதுகுறித்து பேசிய அவர், “நான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் எண்ணத்தைக் கைவிடவில்லை. நான் ஆஸ்திரேலிய அணிக்காக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் (ஒருநாள் மற்றும் டி20) போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறேன். டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய மேக்ஸ்வெல் இதுவரை வெறும் 7 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு கிளென் மேக்ஸ்வெல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now