
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி உலக அளவில் மிகவும் புகழ் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவராக இருக்கிறார். ஏனெனில் கடந்த 15 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் 26,000க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்துள்ள அவர், 80 சதங்கள் விளாசி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.
இதனால் ஏராளமான ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் பின் தொடர்கின்றனர். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கால்பந்து ஜாம்பவான்கள் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோருக்கு பின் அதிக ரசிகர்களை கொண்ட 3ஆவது விளையாட்டு வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார். அந்த நிலையில் விராட் கோலியுடன் கடந்த சில வருடங்களாகவே மொபைலில் மெசேஜ் செய்து தொடர்பில் இருப்பதாக டென்னிஸ் ஜாம்பவான் வீரர் நோவாக் ஜோகோவிக் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும் அவரின் கேரியர் மற்றும் சாதனைகளை ரசிப்பதாக தெரிவித்த ஜோக்கோவிக் இந்தியாவுக்கு செல்லும் போது விராட் கோலியை நேரில் பார்த்து சந்திக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் முதன் முதலில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோகோவிக் தமக்கு மெசேஜ் செய்த போது அது போலியான கணக்கிலிருந்து வந்திருக்கும் என்று நினைத்ததாக விராட் கோலி கூறியுள்ளார்.