
இந்திய அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் நாக் அவுட் போட்டிகளில் தொடர்ந்து மோசமாக செயல்பட்டு வருவது விமர்சனத்திற்கு பெரிய அளவில் உள்ளாகி வருகிறது. மிகக் குறிப்பாக தற்போது ரோஹித் சர்மா கேப்டன்சியின் கீழ் முக்கியமான போட்டிகளில் திட்டங்களும் மனநிலையும் இந்திய வீரர்களிடம் மிகவும்மோசமாக இருக்கிறது.
இதுகுறித்து பேசி இருந்த கவாஸ்கர், தான் ரோஹித் சர்மாவிடம் அதிகம் எதிர்பார்த்ததாகவும், ஆனால் ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் தமக்கு கேப்டனாக திருப்தி அளிக்கவில்லை என்றும், சிறந்த வீரர்களை வைத்திருந்தும் மிக மோசமாக கேப்டனாக செயல்படுகிறார் என்றும் கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார்.
ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் அடுத்த மூன்று மாதத்தில் நடக்க இருக்கின்ற நிலையில், கவாஸ்கர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மீது வைத்த விமர்சனம் மிகவும் முக்கியமான ஒன்றாக கிரிக்கெட் உலகத்தில் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், ரோகித் சர்மா தலைமையின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடியவருமான ஹர்பஜன் சிங் கவாஸ்கர் கருத்துக்கு எதிராக ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக தற்பொழுது தனது கருத்தை முன் வைத்திருக்கிறார்.