
ஆஃப்கானிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியானது லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 273 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக செதிகுல்லா அடல் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 85 ரன்களையும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் ஒரு பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 67 ரன்களைக் குவித்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவார்ஷூயிஸ் 3 விக்கெட்டுகளையும், ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் நாதன் எல்லிஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ ஷார்ட் 20 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் - கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் டிராவிஸ் ஹெட் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியானது 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 109 ரன்களைச் சேர்த்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இப்போட்டியினாது முடிவு எட்டப்படாமல் ரத்து செய்ய படுவதாக அறிவிக்கப்பட்டது.