
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக நேற்று இந்தூரில் நடைபெற்ற 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் முதல் போட்டியிலும் வென்ற இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளால் 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றி தரவரிசையில் 10ஆவது இடத்தில் இருக்கும் ஆஃப்கானிஸ்தானை மிகவும் எளிதாக தோற்கடித்துள்ளது.
முன்னதாக இந்தூரில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் ஆஃப்கானிஸ்தான் நிர்ணயித்த 173 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரோஹித் சர்மா டக் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த விராட் கோலி அதிரடியாக விளையாடி 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய ஜெய்ஸ்வால் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக செயல்பட்டு 68 ரன்கள் குவித்து வெற்றியை உறுதி அவுட்டானார்.
மறுபுறம் மிடில் ஆர்டரில் களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் வெளுத்து வாங்கிய ஷிவம் தூபே 63 ரன்கள் விளாசி 15.3 ஓவரிலேயே இந்தியாவை எளிதாக வெற்றி பெற வைத்தார். இந்நிலையில் இப்போட்டியில் விராட் கோலியுடன் இணைந்து விளையாடியது தமக்கு கிடைத்த கௌரவமான வாய்ப்பு என்று யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.