
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் கடைசி போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரின் சதத்தால் 480 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் மிகவும் முக்கியமாக மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது முதலே இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர். இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், புஜாரா - ஷுப்மன் கில் இணை சிறப்பாக ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது சதத்தை கடந்தார். இதனைத் தொடர்ந்து புஜாரா 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் விராட் கோலி - ஷுப்மன் கில் ஜோடி விரைவாக ரன்கள் சேர்க்க தொடங்கியது. இந்த சூழலில் இளம் வீரர் சுப்மன் கில் 128 ரன்கள் எடுத்து நேதன் லயன் பந்தில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இந்திய அணியை நல்ல நிலையில் விட்டுச் சென்றார். சுப்மன் கில்லின் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். சுப்மன் கில்லிடம் அனைத்து விதமான பந்துகளுக்கும் பதில் இருக்கிறது என்று இந்திய ரசிகர்கள் பாராட்டி உள்ளனர்.