
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் இந்திய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் நிறைவடையவுள்ளது. இதன் காரணமாக இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை பிசிசிஐ தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணபங்களையும் சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் விணப்பத்திற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணபங்கள் வந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்தது. இதனையடுத்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் ராகுல் டிராவிட்டிற்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இது குறித்து பேசிய முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி, “வெளிநாட்டு பயிற்சியாளர்களைவிட இந்தியர்கள் யாராவது தேர்வு செய்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் இந்தியாவில் அபரிமிதமான திறமைசாலிகள் பலர் இருக்கின்றனர். திராவிட்டுக்குப் பதிலாக கம்பீர் தேர்வானால் நன்றாகத்தான் இருக்கும். கம்பீர் விண்ணப்பதாரா தெரியவில்லை. அவர் விண்ணப்பித்தால் மட்டுமே வேலை கிடைக்கும். அவர் நல்ல பயிற்சியாளராக இருப்பார்” என்று தெரிவித்தார்.