
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றி தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்தது. இருப்பினும் இந்தூரில் நடைபெற்ற 3ஆவது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் சிறப்பான வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா தங்களது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து ஒயிட் வாஷ் தோல்வியையும் தவிர்த்தது.
அதனால் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் அணியாக ஆஸ்திரேலியா தகுதி பெற்றுள்ள நிலையில் 2வது அணியாக தகுதி பெறுவதற்கு மார்ச் 9ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் துவங்கிய கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது.
அந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஃபிளாட்டாக இருக்கும் பிட்ச்சில் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 378/5 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. டிராவிஸ் ஹெட் 32, மார்னஸ் லபுஸ்ஷேன் 3, ஸ்டீவ் ஸ்மித் 38, பீட்டர் ஹேண்ட்ஸ்கோப் 17 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா, கேமரூன் க்ரீன் ஆகியோர் சதமடித்து அசத்தியுள்ளனர்.