
இந்தியாவில் நடைப்பெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் வெளியேறியது. இதையடுத்து, இலங்கை கிரிக்கெட் வாரியத்தைக் கலைத்த அந்த நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி ரோஷன் ரணசிங்கே, இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா தலைமையில் புதிய இடைக்கால குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே அரசியல் தலையீடு இருப்பதாக கூறி இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடியாக இடைநீக்கம் செய்தது. இதனால் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இலங்கையில் இருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு ஐசிசி மாற்றியுள்ளது. இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நிர்வாக நிச்சயமற்ற தன்மையை கருத்தில் கொண்டு ஐசிசி இந்த முடிவை எடுத்துள்ளது.
அகமதாபாத்தில் இன்று ஐசிசி வாரியக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வெளியேற்றப்பட்ட தலைவர் ஷம்மி சில்வா கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் நடந்த விரிவான ஆலோசனைகளுக்கு பிறகு இலங்கை கிரிகெட் வாரியம் இடைநிறுத்தப்பட்டதை உறுதி செய்தது. இலங்கை தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும். ஆனால் கிரிக்கெட் வாரியம் இடைநிறுத்தப்பட்டது ரத்து செய்யப்படாது என்று வாரியம் தெளிவாக தெரிவித்துள்ளது.