ஐசிசி உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டி: டிராவிஸ் ஹெட் அபார சதம்; இந்தியாவை வீழ்த்தி 6ஆவது முறையாக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா!
இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 6ஆவது முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது.
இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்றுடன் முடிவடையவுள்ளது. இதில் அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மாவுடன் ஷுப்மன் கில் களமிறங்கினார். இதில் ரோஹித் சர்மா வழக்கம்போல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷுப்மன் கில் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
Trending
அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து விராட் கோலியுடன் இணைந்த கேஎல் ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டிய விராட் கோலி தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், 54 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜாவும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த கேஎல் ராகுல் அணியை இறுதிவரை அழைத்துச்செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதனைத்தொடர்ந்து அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 18 ரன்களிலும், முகமது ஷமி 6 ரன்களிலும், ஜஸ்ப்ரித் பும்ரா ஒரு ரன்னிலும் என ஆட்டமிழக்க, 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹசில்வுட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - டிராவிஸ் ஹெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டேவிட் வார்னர் 7 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமி வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்த போது 15 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித்தும் ஜஸ்ப்ரித் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் - மார்னஸ் லபுஷாக்னே இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். ஒருகட்டத்திற்கு பின் லபுஷாக்னே வழக்கம்போல் தனது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபக்கம் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடியதுடன் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
பின் அதிரடியாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்ததுடன், ஆஸ்திரேலிய அணியின் வெற்றியையும் உறுதிசெய்தார். அதேசமயம் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் தடுமாறி நின்றனர். இதில் இறுதிவரை விளையாடிய இருந்த டிராவிஸ் ஹெட் 15 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 137 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்த மார்னஸ் லபுஷாக்னே 58 ரன்களையும் சேர்த்தனர்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனையைப் படைத்துள்ளது. முன்னதாக அந்த அணி 1987, 1999, 2003, 2007 மற்றும் 2015ஆம் ஆண்டு என ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now