
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான் இந்திய அணியும், டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான லீக் போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு வழக்கம்போல கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆரம்பம் முதலே பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித்தள்ளிய அவர் 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில்லும் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த் விராட் கோலி - ஸ்ரேயாஸ் ஐயர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இப்போட்டியில் தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன, 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அணிக்கு தேவையான ரன்களைச் சேர்த்தனர்.