
இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று மும்பையில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணைஅதிரடியாக விளையாடி 71 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
இதில் ரோஹித் சர்மா 4 பவுண்டரி 4 சிக்சருடன் அதிரடியாக 47 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்தபடியாக வந்த விராட் கோலி தம்முடைய ஸ்டைலில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் ரோஹித் அவுட்டான பின் அதிரடியாக விளையாடிய ஷுப்மன் கில் வேகமாக ரன்களை குவித்ததால் சதத்தை தொடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8 பவுண்டரி 3 சிக்ஸருடன் 79 ரன்களில் மும்பை நிலவிய அதிகப்படியான வெப்பத்தால் பாதியிலேயே பெவிலியன் திரும்பினார்.
அந்த நிலைமையில் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடிய நிலையில் மறுபுறம் நியூசிலாந்து பவுலர்களுக்கு மிகப்பெரிய சவாலாக மாறிய விராட் கோலி 9 பவுண்டரி 1 சிக்சருடன் சதமடித்து 117 ரன்கள் விளாசி ஆட்டமிழருந்தார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை முந்தி 50 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை விராட் கோலி படைத்தார்.