
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இதில் இன்று நடைபெற்ற 28ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்து மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நெதரலாந்து அணிக்கு விக்ரம்ஜித் சிங் - மேக்ஸ் ஓடவுட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் விக்ரம்ஜித் சிங் 3 ரன்களிலும், மேக்ஸ் ஓடவுட் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய காலின் அக்கர் மேனும் 15 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த வெஸ்லி பரேசி - ஸ்காட் எட்வர்ட்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பரேஸி 41 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் பாஸ் டி லீடும் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தனது அரைசதத்தைக் கடந்தார். அவருடன் இணைந்த ஏங்கல்பெர்டும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார்.