
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே - வில் யங் இணை சிறப்பான தொடக்கத்தை கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டெவான் கான்வே 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 32 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடைடைக் கட்டினார்.
அதன்பின் இணைந்த வில் யங் - ரச்சின் ரவீந்திரா இணையும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். அதன்பின் 70 ரன்களில் வில் யங்கும், 51 ரன்களில் ரச்சின் ரவீந்திராவும் என விக்கெட்டை இழந்தனர்.