ஒவ்வொரு டெஸ்ட் போட்டியின் முடிவிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளது. அந்தவகையில் இம்முறை டெஸ்ட் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாகவே ஐசிசி டெஸ்ட் வீரர்களின் புதுப்பிக்கப்பட்ட தரவரிசையை இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் முதலிரண்டு இடங்களைத் தக்கவைத்துள்ளனர். மேற்கொண்டு மூன்றாம் இடத்தில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் தொடர்கிறார். மேலும் நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் ஒரு இடம் முன்னேறி 4ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
முன்னதாக நான்காம் இடத்தில் இருந்த இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடம் பின் தங்கி 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதுதவிர்த்து 9ஆம் இடத்தில் இருந்த ரிஷப் பந்து இரண்டு இடங்கள் பின் தங்கி 11அவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இருப்பினும் இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய ஸ்டீவ் ஸ்மித் ஒரு இடம் முன்னேறி மீண்டும் 10 இடத்திற்குள் நுழைந்துள்ளார்.