
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது சீசன் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. மேற்கொண்டு கடந்த 2007ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியானது 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இது ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் இரண்டுக்கும் தனித்தனியே வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை யார் என்ற பரிந்துரை பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. அதன்படி ஆடவருக்கான சிறந்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் சர்மா மற்றும் ஆஃப்கானிஸ்தானின் ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 8 போட்டிகளில் விளையாடி 4.17 என்ற எகனாமியில் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியதுடன், தொடர் நாயகன் விருதையும் வென்றார். அதேபோல் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கில் 257 ரன்களை குவித்து, இந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.