
இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி லீக் சுற்றுடன் வெளியேறியது. குறிப்பாக ஹஸரங்கா, சனகா போன்ற முக்கிய வீரர்கள் காயத்தை சந்தித்து வெளியேறியதால் பின்னடைவை சந்தித்த அந்த அணிக்கு எஞ்சிய வீரர்களும் சுமாராக செயல்பட்டதால் 9 போட்டிகளில் 2 வெற்றி 7 தோல்விகளை பதிவு செய்து மோசமான வீழ்ச்சியை சந்தித்தது.
அதிலும் குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 302 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி படுதோல்வியை சந்தித்தது. அதை விட 1992 உலக சாம்பியனான இலங்கை அணி ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற கத்துக்குட்டிகளாக கருதப்படும் அணிகளுக்கு எதிராக கூட கொஞ்சமும் போராடாமல் அவமான தோல்விகளை சந்தித்தது. இதனால் ஏமாற்றமும் கோபமும் அடைந்த இலங்கை விளையாட்டுத்துறை தங்களுடைய வாரியத்தை கலைப்பதாக அதிகாரப்பூர்வமாக கடந்த வாரம் அறிவித்தது.
முதலில் இலங்கை அணியை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லாத நிர்வாகிகள் மட்டும் கலைக்கப்பட்ட நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான தோல்வியால் அந்நாட்டு வாரியமே மொத்தமாக கலைக்கப்படுவதாக இலங்கை அரசின் விளையாட்டு துறை தெரிவித்தது. இதற்கு இலங்கை வாரியத்தின் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து விரைவில் வளர்ச்சி பாதைக்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்போம் என்று உறுதியளித்ததை தொடர்ந்து நீதிமன்றம் அந்த தடையை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது.