ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அஸ்வின், ஜடேஜா முன்னேற்றம்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அசத்தலாக பந்துவீசிய இந்திய அணியின் அஸ்வின் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் டெஸ்ட் பவுலருக்கான தர வரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, டெஸ்ட் போட்டிகளில் உலகில் நம்பர் ஒன் அணியாக மாறியுள்ளது. ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியா முதலிடத்தில் இருந்து வரும் நிலையில், தற்போது அனைத்து ஃபார்மேட் போட்டிகளிலும் முதலிடத்தை பிடித்து சாதனையின் உச்சத்திற்கு சென்றுள்ளது இந்திய அணி.
முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 115 புள்ளிகள் கிடைத்துள்ளன. ஆஸ்திரேலிய அணி 111 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது. 106 புள்ளிகளுடன் இங்கிலாந்து 3ஆம் இடத்தை பிடித்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஸ்பின்னர்கள் ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
Trending
இந்த போட்டியில் இந்தியா பந்து வீசியபோது, ஸ்பின் பவுலிங்கிற்கு மட்டுமே 16 விக்கெட்டுகள் கிடைத்தன. ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் 8 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்நிலையில் ஐசிசி பவுலர்களுக்கான தர வரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதில், அஷ்வின் 846 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். முன்னதாக கடந்த 2017இல் அவர் முதலிடத்தில் இருந்தார். அதன்பின்னர் அந்த இடத்தை அவர் இழந்த நிலையில், மீண்டும் முதலிடத்தை பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் 867 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். நீண்ட இடைவேளைக்கு பின்னர் டெஸ்ட் போட்டிகளில் கம்பேக் கொடுத்த ரவிந்திர ஜடேஜா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் 16ஆவது இடத்திற்கு ஜடேஜா முன்னேறியுள்ளார்.
இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் டெல்லியில் நடைபெறுகிறது. இதிலும் வெற்றி பெற்று தொடரில் இந்தியா முன்னிலை பெறுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now