
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது டெஸ்ட் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் எனப்படும் கிரிக்கெட் தொடரை அறிமுகம் செய்தது. அதன்படி இதுவரை இரண்டு சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. இந்நிலையில் ரசிகர்களின் காத்திருப்புக்கு ஐசிசி இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அதன்படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியின் தேதி மற்றும் இடத்தை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. அதன்படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 இன் இறுதிப் போட்டியானது லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 11 முதல் 15 வரை நடைபெறும் என்றும், இப்போட்டிக்கான ரிஸர்வ் டேவாக ஜூலை 16ஆம் தேதி கடைபிடிக்கப்ப்டும் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது.
இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முதல் முறையாக லார்ட்ஸ் மைதானத்தில் நடத்தப்படவுள்ளது. முன்னதாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சீசனுக்கான இறுதிப்போட்டி சௌத்தாம்டனிலும், இரண்டாவது சீசனுக்கான இறுதிப்போட்டி ஓவலிலும் நடத்தப்பட்டது. இரண்டு முறையும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடிய இந்திய அணி, நியூசிலாந்திடமும் மற்றும் ஆஸ்திரேலியாவிடமும் தோல்வியடைந்தது.