
சர்வதேச டி20 கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வெறும் ஓராண்டில் வளர்ந்துள்ளார் சூர்யகுமார் யாதவ். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிடக்கூடிய வீரர் என்பதால் டிவில்லியர்ஸுக்கு பின் மிஸ்டர் 360 என அழைக்கப்படுபவர் சூர்யகுமார் யாதவ்.
இலங்கைக்கு எதிரான டி20 தொடரை வெல்ல கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி கடைசி டி20 போட்டியில் களமிறங்கிய நிலையில், அதிரடியாக விளையாடிய 45 பந்தில் சதமடித்த சூர்யகுமார் யாதவ், 112 ரன்களை குவித்து இந்திய அணி 20 ஓவரில் 228 ரன்களை குவிக்க உதவினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஏற்கனவே 2 சதங்களை விளாசியிருந்த சூர்யகுமார் யாதவ், 3வது சதத்தை இலங்கைக்கு எதிராக விளாசினார்.
மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 1500 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவுக்கு (4 சதங்கள்) அடுத்து 2ஆவது இடத்தில் உள்ளார் சூர்யகுமார் யாதவ். விரைவில் ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்துவிடுவார்.