
சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 469 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக டர்வீஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் எடுத்தனர். இதன்பின் முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு ரஹானே 89 ரன்களும், ஷர்துல் தாகூர் 51 ரன்களும், ஜடேஜா 48 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற பேட்ஸ்மேன்கள் தங்களது பங்களிப்பை செய்து கொடுக்க தவறியதால் இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதன்பின் 173 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ள ஆஸ்திரேலிய அணி, போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் குவித்து 296 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது. இந்தநிலையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான இந்த போட்டி குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா, ஆஸ்திரேலிய அணியை 350 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் மட்டுமே இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.