ஐஎல்டி20 2025: வைப்பர்ஸை வீழ்த்தி முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது கேப்பிட்டல்ஸ்!
டெஸர்ட் வைப்பர்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 இறுதிப்போட்டியில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது.
![ILT20 2025: Dubai Capitals win maiden ILT20 title, beat Desert Vipers in the final! ஐஎல்டி20 2025: வைப்பர்ஸை வீழ்த்தி முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது கேப்பிட்டல்ஸ்!](https://img.cricketnmore.com/uploads/2025/02/ILT20-2025-Dubai-Capitals-win-maiden-ILT20-title,-beat-Desert-Vipers-in-the-final!-mdl.jpg)
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் துபாய் கேப்பிட்டல்ஸ் மற்றும் டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. அதன்படி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் தலா 5 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தனர். அதன்பின் கலமிறங்கிய டேன் லாரன்ஸும் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அந்த அணி 75 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் ஜோடி சேர்ந்த மேக்ஸ் ஹோல்டன் மற்றும் சாம் கரண் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்தும் முயற்சியில் இறங்கினர். இதில் மேக்ஸ் ஹொல்டன் அரைசதம் கடந்து அசத்தினார்.
Trending
அதன்பின் 12 பவுண்டரிகளுடன் 70 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த சாம் கரண் அரைசதம் கடந்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 62 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய அசாம் கான் 27 ரன்களையும் சேர்த்தார். இதன்மூலம் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில்5 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களைச் சேர்த்தது. கேப்பிட்டல்ஸ் தரப்பில் ஒபெத் மெக்காய் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய துபாய் கேப்பிட்டல்ஸ் அணியில் டேவிட் வார்னர் 4 ரன்களிலும், குல்பதின் நைப் 5 ரன்னிலும், கேப்டன் சாம் பில்லிங்ஸ் 6 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஷாய் ஹோப் மற்றும் ரோவ்மன் பாவெல் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் ஷாய் ஹோப் 43 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தசுன் ஷனகாவும் 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோவ்மன் பாவெல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
Also Read: Funding To Save Test Cricket
இப்போட்டியில் ரோவ்மன் பாவெல் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 63 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் அபாரமாக விளையாடிய சிக்கந்தர் ரஸா 12 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 34 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ஐஎல்டி20 தொடரில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now