
ஐஎல்டி20 தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் மற்றும் ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஷார்ஜா வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணிக்கு பில் சால்ட் மற்றும் கைல் மேயர்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் 2 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் மேயர்ஸுடன் இணைந்த ஜோ கிளார்க் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். அதன்பின் 22 ரன்களை எடுத்திருந்த நிலையில் கைல் மேயர்ஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மைக்கேல் பெப்பர் 7 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அவர்களைத் தொடர்ந்து ஜோ கிளார்க் 32 ரன்களுக்கும், அலிஷான் ஷராஃபு 25 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் லௌரி எவான்ஸ் மற்றும் ஆண்ட்ரே ரஸல் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த லௌரி எவான்ஸ் 39 ரன்களையும், ஆண்ட்ரே ரஸல் 24 ரன்களையும் சேர்க்க அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களைச் சேர்த்தது. ஷார்ஜா வாரியர்ஸ் தரப்பில் டிம் சௌதீ, ஆதில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.