
ஐஎல்டி20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் மற்றும் துபாய் கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய துயாப் கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஷாய் ஹோப் மற்றும் பென் டங்க் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ஷாய் ஹோப் 12 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரர் பென் டங்க் 28 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய பிராண்டன் மெக்முல்லன் 13 ரன்களுக்கும், கேப்டன் சிக்கந்தர் ரசா 28 ரன்களுக்கும், ரோவ்மன் பாவெல் 25 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய தசுன் ஷனகா பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தசுன் ஷனகா 33 ரன்களைச் சேர்த்த நிலையில், மறுமுனையில் களமிறங்கிய குல்பதின் நைப் 15 ரன்களுக்கும், குக்லெஜின் 4 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களைச் சேர்த்தது. கல்ஃப் ஜெயண்ட்ஸ் தரப்பில் மார்க் அதிர் மற்றும் அயான் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.