
இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மாஸ்டர்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராய்ப்பூரில் நடைபெற்ற இபோட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிகக மாஸ்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் டுவைன் ஸ்மித் மற்றும் பெர்கின்ஸ் ஆகியோர் தலா 5 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த லிண்டல் சிம்மன்ஸ் - கேப்டன் பிரைன் லாரா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் விக்கெட் இழப்பையும்தடுத்து நிறுத்தினர். இதில் அபாரமாக விளையாடிய சிம்மன்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மறுபக்கம் 29 ரன்களை எடுத்திருந்த நிலையில் லாரா தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அஷ்லே நர்ஸும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அதிரடியாக விளையாடி வந்த சிம்மன்ஸ் சதமடித்து அசத்தியதுடன் 13 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 108 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் தினேஷ் ராம்டின் தனது பங்கிற்கு 6 சிக்ஸர்களை பறக்கவிட்டதுடன் 38 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் குரூகர், நிதினி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.