
ஓய்வு பெற்ற வீரர்களுக்கான மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் மற்றும் இலங்கை மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இலங்கை மாஸ்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணிக்கு கேப்டன் ஷேன் வாட்சன் - ஷான் மார்ஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷேன் வாட்சன் 16 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஷான் மார்ஷ் - பென் டங்க் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமலவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த இருவரும் தங்களின் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
பின்னர் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 56 ரன்களைச் சேர்த்த கையோடு பென் டங்க் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடிய டேனியல் கிறிஸ்டியன் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 77 ரன்களை விளாசி இருந்தா ஷான் மார்ஷும் விக்கெட்டை இழக்க, ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களைச் சேர்த்தது. இலங்கை தரப்பில் உதானா, பிரசாத், சதுரங்கா மற்றும் குணரத்னே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.