
சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 2025 தொடரானது நேற்று நவி மும்பையில் தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் இலங்கை மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மாஸ்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்தியா மாஸ்டர்ஸ் அணிக்கு அம்பத்தி ராயூடு - சச்சின் டெண்டுல்கர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ராயுடு 5 ரன்னிலும், டெண்டுல்கர் 10 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த குர்கீரத் சிங் மற்றும் ஸ்டூவர்ட் பின்னி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்டூவர்ட் பின்னி தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.
மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிய குர்கீரத் சிங் 44 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 3 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 68 ரன்களைச் சேர்த்திருந்த ஸ்டூவர்ட் பின்னியும் ஆட்டமிழந்தார். இறுதியில் யுவராஜ் சிங் மற்றும் யூசுப் பதான் இணை அதிரடியாக விளையாடி அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த யுவராஜ் சிங் 2 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 31 ரன்களையும், யுசூப் பதான் 3 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 56 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் இந்தியா மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களைச் சேர்த்தது.