
உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில். இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி இன்று கௌகாத்தியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்வாட் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜெய்ஸ்வால் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய இஷான் கிஷான் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இதையடுத்து ருதுராஜ் கெய்வாட்டுடன் இணைந்த கேப்டன் சூர்யகுமார் யாதம் தொடக்கத்தில் தடுமாறினாலும் பின்னர் வழக்கம்போல் தனது அதிரடியைக் கட்டினார்.
இப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 39 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் அதிரடி காட்டத்தொடங்கிய ருதுராஜ் கெய்வாட் 32 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் தொடர்ந்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித்தள்ளிய ருதுராஜ் கெய்க்வாட் 52 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார்.