
கடந்த மாதம் 5ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டி, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவும், 2 முறை சாம்பியனான இந்தியாவும் மோதும் இந்த இறுதி ஆட்டம் உலக கிரிக்கெட் ரசிகா்களுக்கு விருந்தளிக்கப் போகிறது.
ஏற்கெனவே இதே உலகக் கோப்பை போட்டியில் 2003ஆம் ஆண்டு தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியனானது. தற்போது மீண்டும் இதே கட்டத்தில் இரு அணிகளும் சந்திக்கும் நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கும் திறனுடன் இந்தியா இருக்கிறது என்றால், அது மிகையாகாது. நடப்பாண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஆஸ்திரேலியாவிடம் இழந்ததற்கும் பதில் தருவதாக இருக்கும்.
கடைசியாக 2013இல் சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்தியாவுக்கு, கடந்த 10 ஆண்டுகளாகவே ஐசிசி போட்டிகளில் கோப்பை என்பது கனவாகவே தொடா்ந்து வருகிறது. இந்த உலகக் கோப்பை போட்டியில் அந்தக் கனவை நனவாக்கும் அனைத்து சாத்தியக்கூறுகளுடனும் இந்தியா இருக்கிறது.