
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், கடந்த 9ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. நாக்பூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 63.5 ஓவர்களில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் மார்னஸ் லபுசாக்னே அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். சிராஜ், ஷமி தலா 1 விக்கெட்டை எடுத்தார்கள்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் இந்திய அணி, 24 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்தது. அதன்பின் 100 ரன்கள் பின் தங்கிய நிலையில் ரோஹித் சர்மா 56 ரன்களுடனும், அஸ்வின் ரன்கள் ஏதுமின்றியும் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் ரோஹித் - அஸ்வின் ஜோடி, 42 ரன்கள் சேர்த்தது. அதன்பின் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்த அஸ்வின், மர்ஃபி பந்தில் ஆட்டமிழந்தார்.