
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் சிக்கி 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் ஆஸ்திரேலியாவின் லபுசேஞ்ச் அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்கு திரும்பிய ரவீந்திர ஜடேஜா, ஆஸ்திரேலியா டாப் பேட்ஸ்மேன்களை தனது சுழலில் சுருட்டி எடுத்துள்ளார். 22 ஓவர்கள் வீசிய ஜடேஜா 8 மெய்டன் ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இந்நிலையில் இந்த போட்டியின் போது ரவீந்திர ஜடேஜா செய்த ஒரு விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆஸ்திரேலியா 120 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்திருந்த போது ஜடேஜா பந்துவீச வந்தார். அப்போது பந்து வீசும் முன் திடீரென முகமது சிராஜிடம் சென்ற ஜடேஜா, அவரின் கைகளில் இருந்து ஏதோ ஒரு திரவியத்தை எடுத்து தனது விரல்களில் பூசிக்கொண்டார்.