
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது மார்ச் 9-ஆம் தேதி துவங்கும் நான்காவது டெஸ்ட் போட்டியுடன் முடிவுக்கு வருகிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது மார்ச் 17-ஆம் தேதி முதல் மார்ச் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியை ஏற்கனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டு விட்டது. அதனை தொடர்ந்து அறிவிக்கப்படாமல் இருந்த ஆஸ்திரேலிய அணியும் தங்களது ஒருநாள் போட்டிகளுக்கான அணியை பட்டியலாக வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த 16 பேர் கொண்ட அணியில் அந்த அணியின் முக்கிய ஆல்ரவுண்டர்களான மேக்ஸ்வெல் மற்றும் மிட்சல் மார்ஷ் ஆகியோர் காயத்திலிருந்து விடுபட்டு மீண்டும் இடம் பிடித்துள்ளதால் அந்த அணியின் பலம் சற்று அதிகரித்துள்ளது.
அதேபோன்று வேகப்பந்து வீச்சாளரான ஜோயி ரிச்சர்ட்சன் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். அவர்களை தவிர்த்து அனுபவ வீரர்களான டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபுஷேன் ஆகிய வீரர்களும் இடம் பிடித்துள்ளதால் இந்த ஒருநாள் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரிய சுவாரசியத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.