
இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது.
இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 114 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 86 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் ஹசன் மஹ்மூத் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியானது பும்ரா மற்றும் அர்ஷ்தீப் ஆகியோரின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
அந்த அணியில் அதிகபட்சமாகவே ஷாகிப் அல் ஹசன் 32 ரன்களைச் சேர்த்தது தான். இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டும், அர்ஷ்தீப், ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில் ரோஹித் சர்மா 5 ரன்களுக்கும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும், விராட் கோலி 17 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.