
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று (பிப்ரவரி 6) நடைபெற்றது. நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்ததார். இப்போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர்கள் யஷஸ்வி ஜெய்வ்ஸால், ஹர்ஷித் ரானா ஆகியோர் பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெற்றனர்.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். தொடக்கத்தில் இருவரும் நிதானமாக விளையாடிய நிலையில், 5ஆவது ஓவருக்கு பிறகு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த முதல் விக்கெட்டிற்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பில் சல்ட் 43 ரன்களிலும், பென் டக்கெட் 32 ரன்களிலும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஹாரி புரூக் ரன்கள் ஏதுமின்றியும், ஜோ ரூட் 19 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் இலங்கை அணி 111 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோஸ் பட்லர் - ஜேக்கப் பெத்தெல் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியிலும் இறங்கினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர் அரைசதம் கடந்தார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.