
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இம்மாதம் முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி ஹைத்ராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக இத்தொடர் நடைபெறவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளன.
இதையடுத்து இப்போட்டிக்கான இரு அணி வீரர்களும் நேற்றைய தினம் ஹைத்ராபாத்திற்கு சென்று தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களினால் விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக பிசிசிஐயிடம் விராட் கோலி தெரிவித்துள்ளார். மேலும் கேப்டன் ரோஹித் சர்மா, அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் ஆகியோரிடம் பேசிய விராட் கோலி, நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதே தனது முதன்மையான கடமையாக இருக்கும் அதே வேளையில், சில தனிப்பட்ட சூழ்நிலைகளின் காரணமாக இப்போட்டிகளிலிருந்து விலகுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.