
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று ராஞ்சியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டெவான் கான்வே மற்றும் ஃபின் ஆலன் இணைந்து அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 4.2 ஓவரில் 43 ரன்கள் அடித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 23 பந்தில் 35 ரன்கள் அடித்து ஃபின் ஆலன் ஆட்டமிழந்தார். ஃபின் ஆலனை அவுட்டாக்கி முதல் பிரேக்கை கொடுத்தார் வாஷிங்டன் சுந்தர். ஃபின் ஆலனை வீழ்த்திய அதே 5ஆவது ஓவரில் மார்க் சாப்மேனையும் டக் அவுட்டாக்கி அனுப்பினார் சுந்தர்.
ஆனால் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர் டெவான் கான்வே அரைசதம் அடித்தார். 35 பந்தில் 52 ரன்கள் அடித்து கான்வே அர்ஷ்தீப் சிங்கின் பவுலிங்கில் 18வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் மைக்கேல் பிரேஸ்வெல்லும் ரன் அவுட்டானார். அர்ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசிய டேரைல் மிட்செல் 26 பந்தில் அரைசதம் அடித்தார். 30 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 59 ரன்களை குவித்து நியூசிலாந்து அணிக்கு இன்னிங்ஸை சிறப்பாக முடித்து கொடுக்க, 20 ஓவரில் 176 ரன்களை குவித்தது நியூசிலாந்து அணி.