
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தார்.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் 15 ரன்னிலும், வில் யங் 18 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த டெவான் கான்வே - ரச்சின் ரவீந்திரான இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்தும் அசத்தினர். அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டெவான் கான்வே 76 ரன்களில் பெவிலியன் திரும்ப, ரச்சின் ரவீந்திராவும் 65 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய டேரில் மிட்செல் 18 ரன்களுக்கும், டாம் பிளெண்டல் 3 ரன்களுக்கும், கிளென் பிலீப்ஸ் 9 ரன்களுக்கும், டிம் சௌதீ 5 ரன்களுக்கும், அஜாஸ் படேல் 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க, அதிரடியாக விளையாடிய மிட்செல் சாண்ட்னரும் 33 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இதனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களை எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.