IND vs NZ, 3rd T20I: நியூசிலாந்தை சொற்ப ரன்களில் சுருட்டி தொடரை வென்றது இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் விளையாடி வருகின்றன. இந்த போட்டி அகமதாபாத் நகரில் நடைபெற்றது. இதில் வெல்லும் அணி தொடரையும் வெல்லும் என்ற நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணிக்காக ஷுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர். இதில் கிஷன், 1 ரன் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த திரிபாதி உடன் 80 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஷுப்மன் கில். பின் ராகுல் திரிபாதி, 22 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து சூர்யகுமார் யாதவ், 13 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
Trending
கேப்டன் ஹர்திக் பாண்டியாவுடன் 103 ரன்களுக்கு கில் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இதில் ஷுப்மன் கில் 54 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 சதத்தை விளாசியிருந்தார். மறுமுனையில் பாண்டியா, 17 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் இருந்த கில், 63 பந்துகளில் 126 ரன்களை எடுத்திருந்தார். இதில் 12 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்களை அவர் விளாசினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கும் ஆரம்பமே பேரதிர்ச்சி காத்திருந்தது. இதில் தொடக்க வீரர் ஃபின் ஆலன், ஹர்திக் பாண்டியாவின் முதல் ஓவரிலேயே ஒரு ரன்னுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதைத்தொடர்ந்து அர்ஷ்தீப் சிங் வீசிய இரண்டாவது ஓவரில் டெவான் கான்வே ஒரு ரன்னிலும், மார்க் சாப்மேன் ரன் ஏதுமின்றியும் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க, அடுத்த ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா, கிளென் பிலீப்ஸின் விக்கெட்டையும் கைப்பற்றி வழியனுப்பிவைத்தார்.
இதையடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாட முயற்சித்த மைக்கேல் பிரேஸ்வெல்லின் விக்கெட்டை கிளீன் போல்டாக்கினார் உம்ரான் மாலிக். அதன்பின் வந்த கேப்டன் மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி ஆகியோரது விக்கெட்டுகளை ஷிவம் மாவி கைப்பற்ற, லோக்கி ஃபர்குசனின் விக்கெட்டையும் ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார்.
ஒருபக்கம் சீட்டுக்கட்டு போல் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் அதிரடி காட்டிய டேரில் மிட்செல் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்,ஷிவம் மாவி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் நியூசிலாந்து அணி 12.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 66 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியதுடன், 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now