
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி அஹமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு இஷான் கிஷன் வெறும் 1 ரன்னில் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தார். அடுத்ததாக களத்திற்கு வந்த ராகுல் திரிபாதி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 22 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து கொடுத்தார். அடுத்ததாக களத்திற்கு வந்த சூர்யகுமார் யாதவ் 24 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.
இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் சொதப்பினாலும், டி20 போட்டிகளுக்கு இவர் சரிப்பட்டு வரமாட்டார் என பெரும்பாலான முன்னாள் வீரர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட ஷுப்மன் கில், இந்த போட்டியில் தன் மீதான அனைத்து விமர்ச்சனங்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் மிக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.