
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்று மோதுகிறது. இதில் வெற்றி பெறும் பட்சத்தில் உள்நாட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதன்முறையாக டி 20 தொடரை இந்திய அணி வென்று சாதனை படைக்கும்.
இரு அணிகள் இடையே திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர் ஆகியோர் ஆடுகளத்தின் தன்மையை சிறப்பாக பயன்படுத்தி 3 ஓவர்களுக்குள்ளேயே தென் ஆப்பிரிக்க அணியின் 5 முக்கிய விக்கெட்களை வீழ்த்தி மிரளச் செய்தனர்.
ஆனால் கௌகாத்தி ஆடுகளம் திருவனந்தபுரத்தில் இருந்து மாறுபட்டது. இந்த ஆட்டம் இந்திய பந்து வீச்சுத்துறைக்கு சவால் நிறைந்ததாக இருக்கக்கூடும். பும்ரா இல்லாத நிலையில் முதல் ஆட்டத்தில் விளையாடிய அதே பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கக்கூடும். திருவனந்தபுரத்தில் அக்சர் படேல், அஸ்வின் கூட்டணியும் அசத்தியிருந்தது.