
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், 2ஆவது டி20 போட்டி இன்று கவுஹாத்தியில் நடக்கிறது.
இதுவரை இந்திய மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றிராத இந்திய அணி, முதல் முறையாக டி20 தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் - ராகுல் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவருமே அடித்து ஆட பவர்ப்ளேயில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 57 ரன்களை குவித்தது. 37 பந்தில் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா. ஆனால் அதிரடியாக ஆடிய கேஎல் ராகுல் அரைசதம் அடித்தார். 28 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 57 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.