IND vs SA, 3rd ODI: அரைசதத்தை தவறவிட்ட ஷுப்மன்; தொடரை வென்றது இந்திய அணி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை அந்த அணி இழந்த நிலையில் 3 போட்டிகள் ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்றது. அதனால் தொடர் சமன் ஆனது.
இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் தவான், பவுலிங் தேர்வு செய்தார்.
Trending
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியால் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அந்த அணியில் ஹென்ரிச் கிளாசன் 34 ரன்களைச் சேர்த்ததைத் தாண்டி மற்ற யாரும் சொல்லிக்கொள்ளும் அளவு ரன்களைச் சேர்க்கவில்லை. இதனால் தென் ஆப்பிரிக்க வெறும் 27.1 ஓவர்களில் 99 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். சிராஜ், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷாபாஸ் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.
100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டி களமிறங்கிய இந்திய அணியில் வழக்கம் போல் கேப்டன் ஷிகர் தவான் 8 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த ஷுப்மன் கில் - இஷான் கிஷான் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படித்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் 10 ரன்களைச் சேர்த்த நிலையில் இஷான் கிஷான் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மன் கில்லும் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் இந்திய அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி வென்றது. இத்தோல்வியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி அடுத்த ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now